கிரைய பத்திரங்களை பொதுமக்களே தயாரிக்கும் வகையிலான புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது பதிவுத் துறை. சொத்து வாங்குவோர் அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில், மாதிரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. பத்திரப்பதிவுக்கான ஸ்டார் டூ பாய்ன்ட் ஓ மென்பொருளில் இதற்கான வழிமுறைகளை பதிவுத் துறை வழங்கியுள்ளது. அதன்படி, கிரைய பத்திரத்தின் வரைவை, எளிதாக தயாரிப்பதற்கான மாதிரிகள் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன.
சொத்து வாங்குவோர் தங்கள் அடையாள விபரங்களைக் கொடுத்து லாக்இன் செய்து, என்ன வகையான பரிமாற்ற அடிப்படையில் கிரையம் செய்ய விரும்புகிறோமோ அதனை உள்ளிட்டால், ஆவண மாதிரி கிடைக்கும் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. மாதிரி ஆவணத்தில் விற்பவர், வாங்குபவர் விபரம் கொடுத்தால் கிரைய பத்திரம் தயாராகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களை சார்-பதிவாளர் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ள பதிவுத் துறை, டோக்கன் பெறுவது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மக்களே செய்யலாம் எனவும் தெரிவித்தது.