தமிழ்நாடு

வடக்கு நோக்கி வேகமாக நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எவ்வளவு தொலைவு?

JustinDurai
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று மாலை புதுச்சேரிக்கு வடக்கே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலை தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது தற்போது சென்னையில் இருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 280 கிலோ மீட்டர் தொலையிலும் உள்ளது. தாழ்வு மண்டலம், வடக்கு நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு வடக்கே மாமல்லபுரம் அருகே இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமான் அருகே நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.