சாத்தான் குளத்தில் கைது செய்யப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி ட்விட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு காவல் ஆய்வாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம் இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் எனக் கூறியது.
இந்த உயிரிழப்புச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் விசாரணைக் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “ சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாமதமாகும் நீதி என்பது அநீதியானது”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாடலாசிரியர் விவேக்,“ நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம் ..ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் !!” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் “ ரசிகர்களாகிய நாம் சமூக ஊடகங்களில் பல விஷயங்களை ட்ரெண்ட் செய்கிறோம்! இந்தக் குடும்பத்திற்கு நீதி தேவை! இது வைரல் ஆகணும். தல, தளபதி, சூர்யா, விக்ரம் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் “அது தவறாக இருக்கும் போது இதுவும் தவறுதான். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. சாத்தான்குளம் காவல்துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் குடும்பத்திற்கு நீதி வேண்டும். அவர்களுக்கு என் அஞ்சலி. முழு காவல்துறையையும் குறை கூறவில்லை. அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமான் “ ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைக் கேட்டுப் பயந்தேன். இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. அவர்கள் அனுபவித்த சித்ரவதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரக்கமற்ற செயலுக்காக இந்தியா குரல் எழுப்ப வேண்டும். இந்தியாவின் ஜார்ஜ் ஃபிலாய்டுதான் ஜெயராஜும், பென்னிஸூம்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை ஹன்சிகா, “ ஜெயராஜுக்கும், பென்னிஸுக்கும் இழைக்கப்பட்ட அநீதி எனக்குப் பயத்தை உண்டாகியுள்ளது. இந்த வெறி பிடித்தவர்கள் நமது காவல்துறை மற்றும் நாட்டிற்கு அவமானத்தை உண்டாக்கி விட்டனர். அவர்களை விடக் கூடாது. சட்டத்தின் முன் அனைவருக்கும் ஒரே நீதிதான். உயிரிழந்தவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜி.வி பிரகாஷ் குமார், “ பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை... நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் என்பதே வரலாறு...இருவர் மரணத்தை மனிதக் குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி “ தூத்துக்குடி சம்பவம் கொடூரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை அஞ்சலி “ இது கொடூரமானது !! யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை, இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நீதி வேண்டும். நீதி தாமதமானால் நீதி மறுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.