தமிழ்நாடு

பார்சல் வாங்கிவந்து பழரசம் அருந்திய தாய்,மகள்-கடைசியில் நேர்ந்த சோகம்; உறவினர்கள் சந்தேகம்

webteam

கோவில்படடி அருகே பார்சல் வாங்கிவந்து வீட்டில் பழரசம் அருந்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் உயிரிழ்ந்தநிலையில், தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (42). கடம்பூர் சாலையில் ஓட்டல்கள் வைத்து பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (35). இவர்களது மகள் லெட்சுமிபிரியா (15). தாழையூத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாலிங்கத்தின் மனைவி சாந்தி கடந்த 11-ம் தேதி கீழபஜாரில் பழக்கடை ஒன்றில் பழரசம் வாங்கி பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாந்தி, லட்சுமிபிரியா அருந்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாலையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருவரும் கயத்தாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின்னர் 13 மற்றும் 14-ம் தேதி கோவில்பட்டி தனியார் மருத்துவமனையிலும், 15 மற்றும்16-ம் தேதிகளில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் 17-ம் தேதி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்னை அப்பல்லோ மருத்வமனைக்கு செல்லும் போது வழியிலேயே லட்சுமிபிரியா இறந்துள்ளார்.

அதன்பின்னர் ஆம்புலன்ஸ் திரும்பிவந்தநிலையில், தாய் சாந்தி நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த லட்சுமிபிரியா உடல் பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தாய், மகள் வாங்கிவந்த பழரசத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், லட்சுமிபிரியா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கயத்தார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையினை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டகவர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை மகாலிங்கம் கூறுகையில், தனது மனைவி, மகள் இருவரும் வாங்கி அருந்திய பழரசத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், தனது மனைவி, மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்து இருந்து இருந்தாக கூறியுதாகவும், எனவே தங்களுக்கு சந்தேகம் இருப்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் சரியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாணவியின் மரணத்தினை சந்தேக மரணம் என்று கூறி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவதாகவும், உடற்கூறாய்வு ஆய்வு முடிவுக்கு பின்னர் தான் உண்மை நிலவரம் தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவி இறந்து, தாய் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் கயத்தார் வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.