குதிரை பேர வழக்கில் தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதலில் ரமேஷுக்கு எதிரான விசாரணைக்கு மட்டும் தடை இருந்தது. இன்று தலைமை நீதிபதி அமர்வு, முழு வழக்கின் விசாரணைக்கும் தற்காலிக தடை விதித்தது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவு என பார்க்கப்படுகிறது.
தவெகவை சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கடந்த மாதம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாகவும், இதில் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியிருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையை சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரும் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கைது செய்யப்பட்ட ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மனுதாரரை சம்பந்தம் இல்லாமல் இந்த வழக்கில் கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை என்றும், முறையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அதோடு தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மனுதாரர் ரமேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குதிரை பேரம் தொடர்பான ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். நீதிபதிகளின் இந்த உத்தரவு தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.