இடத்தகராறு புகாரில் நடவடிக்கை இல்லை என ஆட்சியர் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி - சசிகலா தம்பதியினர். கட்டட தொழிலாளியான ராமசாமி தனது தாயாரின் பெயரில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதே பகுதியில் 8 செண்ட் இடம் வாங்கியுள்ளனர். இந்த இடத்தை தனது சகோதரர்களுடன் பிரித்துக்கொண்டு தனது பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு வீடு கட்டியுள்ளனர்.
இந்நிலையில், ராமசாமியின் இடத்தின் அடுத்துள்ள மனையின் உரிமையாளர் குருசாமி என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுயுள்ளதாக புகார் தெரிவித்து மிரட்டி வந்ததாகவும் இதுகுறித்து பலமுறை மனுக்கள் வழங்கியும் அதிகாரிகள் குருசாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவரது இடத்தில் வீடு கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் ராமசாமி -சசிகலா தம்பதியினர் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதனையடுத்து ஆட்சியரின் பாதுகாவலர்கள் தம்பதியினரை தடுத்து நிறுத்திய நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ஆட்சியர் கண்டித்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.