தமிழ்நாடு

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு: சேலம் பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

webteam

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு தொடர்பாக சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி பாஸ்கர் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாந்து வாஸ்திர சேவை தரிசனத்திற்காக ரூபாய் 12,250 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு செலுத்திய இந்த கட்டணத்தின் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி தரிசனத்திற்காக நேரம் ஒதுக்கி இருந்தது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம். ஆனால் கொரோனா பேரிடர் காரணமாக தரிசனம் தடைபட்டதால் சம்பந்தப்பட்ட பக்தருக்கு மாற்று தேதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரையில் தரிசனத்திற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படாததால் ஹரிபாஸ்கர் திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு தொடர்பாக சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரருக்கு ஒரு வருட காலத்தில் தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் ரூபாய் 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் மனுதாரர் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆறு சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாணவிகளுக்கு மாதந்தோறும் பணம்... புதுமைப் பெண் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்