ரயில் பயணத்தில் சேவைகுறைபாட்டால் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வருசை இக்பால் (67). இவர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையிலிருந்து நெல்லைக்கு அனந்தபுரி ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயிலில் படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு இக்பால் முன்பதிவு செய்துள்ளார். அவரது படுக்கை வசதி கொண்ட இருக்கை மேலே இருந்துள்ளது. ஆனால் ஏறி செல்ல ஏணி வசதி இல்லை. இதனால் தரையில் படுத்து பயணம் செய்த வருசை இக்பால், எலி தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சேவை குறைபாடு குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய இக்பாலுக்கு, உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய இக்பால், ரயிலில் சேவைகுறைபாடு இருந்ததாகவும், அதனால் தான் மனுஉளைச்சலுக்கு ஆளானதாகவும் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் மனுதாரருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.