பொன்.மாணிக்கவேல் மீது தரப்பட்டுள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காமல் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. இளங்கோ திரும்பிச் சென்றார்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த 13 பேர் பொன்.மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். அதில், உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப்பதிவு செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக பொன்.மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பொன்.மாணிக்கவேல், “என் மீது புகார் அளித்தவர்கள் ஒரு எஃப்ஐஆரை கூட பதிவு செய்ததில்லை. புகார் அளித்த அதிகாரிகளை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்துவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது தற்போது மூன்றாவது முறையாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தது குறித்து போரூர் தீனதயாளன், சக்திவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். இவ்வழக்கில் கைதானவர்களில் ஒருவரான சக்திவேல் என்பவரிடம், குற்றம் குறித்து ஒப்புக்கொள்ளும் படி பொன்.மாணிக்கவேல் வற்புறுத்தினாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவ்வாறு தம்மை அவர் வற்புறுத்தவில்லை என சக்திவேல் பதிலளித்தார். அப்போது சக்திவேலை நகரச் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கினார் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. இளங்கோ.
பொய் வழக்குகள் பதிந்தால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்ததாகக் கூறினார். அப்போது உயரதிகாரிகள் கூறினால் பொய் வழக்கு போடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப முயன்றனர். அதனை கை காட்டி தடுத்த ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, தாம் சொல்வதை முதலில் கேட்குமாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பொன்.மாணிக்கவேலை சமூக வலைத்தளங்கள் ஹீரோவாக சித்தரிப்பதாக விமர்சித்தார்.