தமிழ்நாடு

திருப்பத்தூர்: அறிவியல் இயக்கத்தின் புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார் ஆட்சியர்

webteam

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் "புத்தாண்டைப் புத்தகங்களோடு கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை ஆட்சியர் மா.ப.சிவன்அருள் துவக்கி வைத்தார்.

முதல் விற்பனையைத் துவக்கி வைப்பதன் பொருட்டு ஆட்சியர் புத்தகங்களை வழங்க திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் குழுமத்தின் செந்தில் முருகன் அவர்களும் பொதுமக்கள் பலரும் ஆட்சியரின் கையொப்பத்துடன் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர், “புத்தகங்களைப் பரிசளிக்கவும் வாசிக்கவும் தூண்டும் புத்தகக் கண்காட்சிகள் நிறைய நடைபெற வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் சமூகம்தான் நாகரிகமான சமூகம். குறிப்பாக குழந்தைகளை வாசிப்பாளர்களாக மாற்றிவிட்டால் நாளைய சமூகம் சிறப்பான ஒன்றாக மாறிவிடும்” என்றார்.

இந்த புத்தக கண்காட்சியில் அறிவியல் வெளியீடு பதிப்பகத்தின் 4 முதல் 6 புத்தகங்கள் கொண்ட 150 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 100 ரூபாய்க்கு சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டன. ச.மாடசாமி, ஆயிஷா நடராசன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் ஆசிரியர்களும், மாணவர்களும், பெண்களும், குழந்தைகளும் வாசிக்கத்தக்க கல்வி சார்ந்த புத்தகங்கள் 20% சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டன.