தமிழ்நாடு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு

webteam

நகர்ப்புறங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. 
நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்க தடை விதிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவையடுத்து, மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாநில அரசு மாற்றம் செய்வதற்கு தடை ஏதுமிருக்காது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை மூடும் நிலை ஏற்பட்டது. எனினும், மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு இடங்களில் திறப்பதில் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றம் செய்தால் மதுக்கடைகள் செயல்படுவதில் தடை ஏற்படாது என்று அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதற்கேற்ப, நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலையாக மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பதால் மீண்டும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகள் விபத்துகளுக்கு முக்கிய காரணம் எனக் கூறி, உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலையோர கடைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த மதுபானக்கடைகள் மூடப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட மதுபான கடைகளுக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.