குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.30 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது. சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதலில், 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கிறது.
குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில், மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.