தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

JustinDurai
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி. திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கோவை சின்னக்கல்லார் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.