தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் தற்போது 12 மணிக்கு திறக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது கைது செய்யப்பட்ட 23 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் மீதான வழக்குகளை நீதிபதிகள் ரத்து செய்தனர். பின்னர், டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவது, நேரத்தை குறைப்பது, ஆண்டுக்கு 500 கடைகளை படிப்படியாக குறைப்பது உள்ளிட்ட தமிழக அரசின் முடிவுகளை அமல்படுத்துவது தொடர்பாக விசாரணையை நிலுவையில் வைத்து நீதிபதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அமர்வுக்கு முன் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து மூடப்படும் என்று தமிழக அரசு கூறியது. 

நீதிபதிகள் கூறுகையில், “ஏற்கனவே 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகளை 12 மணி என்று மாற்றினீர்கள். ஆனால், 12 மணிக்கு என்றால் கூட சாப்பிடாமல் டாஸ்மாக் வந்து காத்திருக்கிறார்கள். இதனை தடுப்பதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் தாமதமாக திறந்தால் என்ன? இது அரசின் கொள்கை முடிவு என்பது தெரியும். இது தொடர்பாக விளக்கத்தை அடுத்தவாரம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், மதுக்கடை பார்களில் உணவு தரமாக உள்ளதாக என ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.