தமிழ்நாடு

மழை பாதிப்பு: மத்தியக் குழு 2-வது நாள் ஆய்வு

JustinDurai
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று இரண்டாது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
வெள்ள சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் மத்திய குழுவினர், இரு பிரிவாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று ஒரு குழுவினர் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கடலூர் மாவட்டத்திலும், அதன்பிறகு 2 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் மாலை 6 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர்.
அதேபோல் மற்றொரு குழு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்து இரவில் சென்னை திரும்புகிறது. நாளை முதலமைச்சர் தலைமையில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசித்த பின்னர், மத்தியக் குழுவினர் டெல்லி புறப்படவுள்ளனர்.