தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை தேர்வு தமிழில் வேண்டும்-சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

JustinDurai
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வினை மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ளது மத்திய அரசு.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் சில தினங்களுக்கு முன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அக்கடிதத்தில், கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை ( ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000) வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக மட்டுமே இருக்கும் என்கிற பாரபட்சம் அகற்றப்பட்டு, மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்கள், விண்ணப்ப கட்டணம் குறைக்கப்படுதல் ஆகிய கோரிக்கைகளையும் அதில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தனது கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பதில் தந்துள்ளதாக தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், இது குறித்து பரிசீலிக்கப்பட்டது எனவும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் (W.P. (MD) No. 16064/ 2021) அரசின் நிலையை வாக்கு மூலமாக சென்னை, மதுரை அமர்வுகளில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும் எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.