தமிழ்நாடு

கருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி

கருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி

webteam

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என  உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி, உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10
நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது.
இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர
மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் நாளை தமிழகத்தில்
பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அந்த நாட்களில்
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் நாளை அரசு பொதுவிடுமுறை மற்றும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உட்பட நாடுமுழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பொது நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக அரசு சார்பிலும் கருணாநிதி மறைவுக்காக நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.