காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என்றும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றும் சென்னையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் 125 ஆண்டு கால காவிரி நீர் பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நீர் பிரச்னையை பேசி தீர்க்க தமிழகம் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “ கர்நாடக அரசையும், மக்களையும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் உங்கள் சகோதரராக பார்க்க வேண்டும். நாம் இந்தியா, பாகிஸ்தான் குடிமகன்கள் அல்ல. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். காவிரி பிரச்னைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண முடியாது. நாம் அமர்ந்து பேசிதான் அதனை சரி செய்யமுடியும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர், அரசியல் கட்சியினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நாம் கூடி பேசினால் தான் 125 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண முடியும்” என்று தெரிவித்தார்.