தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு, எஸ்.ஐ கைது

webteam

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலரின் கணவர் புதிய தலைமுறைக்குப் பிரத்யே பேட்டி அளித்தார். பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை அவர் அந்தப் பேட்டியில் விளக்கி இருந்தார். இதனிடையே சிபிசிஐடி காவல்துறையின் சாத்தான்குளம் பெண் காவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களிலும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. அதாவது 176 ( 1) கஸ்டடியில் உயிரிழப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக 302 என பதிவு செய்து முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். 302 பிரிவு உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாத்தான்குளம் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.