தமிழ்நாடு

குளித்தலை: காவிரி ஆற்றுப் பகுதியில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் -கடைசியில் நடந்த சோகம்

webteam

குளித்தலை அருகே கடம்பர் கோயில் காவிரி ஆற்றுப் பகுதியில், குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கியதில், தம்பி சடலமாக மீட்ட நிலையில் இன்று அண்ணனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் பகுதி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சகோதரர்களான திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தை சேர்ந்த ஜெயபாலன், ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் மனோகரன் ஆகிய மூன்று குடும்பத்தினரும் சேர்ந்து, நேற்று தங்களது சொந்த ஊரான தொட்டியம் அருகே பாலசமுத்திரம் கிராமத்திற்கு சென்று தந்தை நடேசனுக்கு திதி கொடுத்துள்ளனர்.

பின்னர் வீரப்பூர் கோயில் செல்வதற்காக வந்தபொழுது குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்துவிட்டு செல்லலாம் என்று குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஜெயபாலனின் இரு மகன்கள் அருணாச்சலம் (25), வெங்கடாசலம் (22) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியநிலையில், அவர்களை ஆற்று நீர் அடித்துச் சென்றது.

இதில் வெங்கடாசலம் சடலமாக நேற்று மீட்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அதேநேரத்தில் காணாமல்போன அருணாச்சலத்தை முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் உடல் கடம்பர் கோயில் காவேரி ஆற்று அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குளித்தலை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி ஆற்று பகுதியில் யாரும் குளிக்க செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.