சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்துத்தகராறில், ஒன்றரை ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வெங்காய செடிகள் அழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்துடன் வந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டிணத்தைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் முருகனுக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமலைச்செல்வன் சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். இந்த பயிரை முருகன் பூச்சி மருந்து தெளித்து அழித்துவிட்டதாக தெரிகிறது. கிணற்றிலும் பூச்சி மருத்து தெளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலைச்செல்வன் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட திருமலைச்செல்வன், அவரது தாய் சோலையம்மாள் , மனைவி தங்கம்மாள் மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பூச்சி மருந்து பாட்டிலுடன் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் சோதனை செய்தபோது இவர்களை தடுத்து நிறுத்தி பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாத்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க கூட்டிச் சென்றனர். இதுகுறித்து திருமலைச்செல்வன், அவரது மனைவி ஆகியோர் கூறுகையில், சொத்து தகராறில் எங்களின் விவசாய நிலம் பூச்சி மருந்து ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து சிவகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்வோம் எனவும் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்