தமிழகத்திற்கு சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நெல்லை வண்ணார்பேட்டையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 13 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யார் தமிழகத்திற்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் பணியை துவக்கி இருக்கிறோம். பாஜக-அதிமுக-பாமக உள்ளிட்ட கூட்டணி வெற்றி கூட்டணி, இது தமிழகத்தின் நலன் காக்கும் கூட்டணியாக விளங்குகிறது. மேலும் அதிமுகவிலும், பிஜேபியிலும், முஸ்லிம், கிறிஸ்துவ வேட்பாளர்களை நிறுத்தினால் அதனை இந்து மக்கள் கட்சி எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எனவும் கூறினார்.
மேலும் திமுக ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மக்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இதனால் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி தோல்வி அடைவார். அதற்குப் பதில் பாஜக சார்பில் அந்தத் தொகுதியில் தமிழிசை போட்டியிட்டால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் பாஜக பெற்றுள்ள 5 தொகுதியில் அகில பாரத தலைவர் அமித்ஷா கோவையிலும், கடந்த முறை காசியில் போடியிட்ட பாரத பிரதமர் இந்த முறை தமிழகத்தில் புண்ணிய பூமியான ராமேஸ்வரம் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் வரும் 10ம் தேதி தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பிரச்சரத்தை துவங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.