ban on Enrica liquor AI
தமிழ்நாடு

மீண்டும் ENRICA மதுவுக்கு அனுமதி : 24 மணி நேரத்தில் தடை நீக்கம்.. டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு.!

என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அந்த தடையை நீக்கி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த ஆய்வில், குறிப்பிட்ட மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியபட்டது. இதையடுத்து, அந்த தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த FSSAI அமைப்பு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், என்ரிகா நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் TASMAC கிடங்குகளில் இருந்து Retail Vending கடைகளுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தவும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதை நிறுத்தவும் அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், டிப்போ மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது.

மேலும், மறு உத்தரவு வரும் வரை இந்த நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து நேற்று விற்பனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. FSSAI மீண்டும் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுபானங்கள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தடை விதிக்கப்பட்டதும், பின்னர் அந்த தடை நீக்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.