தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் 3வது எதிர்மனுதாரரின் வழக்கறிஞரான வாஞ்சிநாதன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வாஞ்சிநாதன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாகத் தான் நேரில் ஆஜராக அவர் அழைக்கப்பட்டார்.
நீதிபதிகள், "எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) நீதிமன்ற கடமைகளை நிறைவேற்றுவதில் வகுப்புவாதம் மற்றும் சாதி சார்புகளை வெளிப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறீர்களா?” என நேரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல், மேல்முறையீடு வழக்கில் 3வது எதிர்மனுதாரருக்காக ஆஜராவதில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “மேல்முறையீட்டு மனுவிலிருந்து விலகுவதால், அவர் மீதான இந்த நடவடிக்கையை கைவிட முடியாது. வாஞ்சிநாதனின் நடத்தை வழக்கறிஞருக்கு களங்கம் கற்பிப்பது போல் இருப்பதாகக்கூறி, அவரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. பின்னர் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகும் அவர் தனது நடத்தையை மேம்படுத்தவில்லை. தனது வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதூறாகப் பேசி வருகிறார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் நிரம்பியுள்ளன. தீர்ப்புகளை விமர்சிப்பது ஒரு விஷயம், ஆனால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது முற்றிலும் வேறு விஷயம். வாஞ்சிநாதனின் நடத்தை, முதல் பார்வையில் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகும். அதனால் தான், இந்த மேல்முறையீட்டில் மூன்றாவது பிரதிவாதிக்கான வழக்கறிஞராக அவர் இனி இல்லை என்றாலும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை” என்று கூறினர்.
மேலும், “இதையடுத்து எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.எஸ்,) தனது நீதித்துறை கடமைகளைச் செய்யும்போது சாதி ரீதியாக நடந்து கொள்கிறாரா என தொடர்ந்து கூறுகிறீர்களா? என்ற எங்கள் கேள்வியை நாங்கள் தொடர்ந்து எழுப்பினோம். அதற்கு பதிலாக, இந்த கேள்விக்கு பதிலளிக்க எழுத்துப்பூர்வமாக உத்தரவிடுமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார். இதனால் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 28.07.2025 அன்று பிற்பகல் 01.15 மணிக்கு பதில் அளிக்க வேண்டும். அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்த நிலையில், வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி மதுரையில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுவாமிநாதன் அவர்களே திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வழக்கை ரத்துசெய்ய அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாரை கசியவிட்டது வாஞ்சிநாதன் அல்ல, யார் கசியவிட்டார்கள் என்பதை கண்டறிய அவர் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார். அதுபோக ஒரு நீதிபதி குறித்து தலைமை நீதிபதியிடம் புகாரளிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்றும் தெரிவித்தார்.