தமிழ்நாடு

குழந்தையின் முழுமையான எலும்புக்கூடு - கொந்தகை அகழாய்வில் கண்டெடுப்பு..!

குழந்தையின் முழுமையான எலும்புக்கூடு - கொந்தகை அகழாய்வில் கண்டெடுப்பு..!

webteam

கொந்தகை அகழாய்வில் முழு அளவிலான குழந்தையின் எலும்புக்கூடு சேதாரம் இல்லாமல் கிடைத்துள்ளது..

தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கீழடியில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வில் கணடறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இது மட்டுமன்றி அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன உருளை வடிவ நான்கு எடைக்கற்கள், பச்சை மற்றும் நீல வண்ண பாசிகளும் கண்டெடுக்கப்பட்டன. அகரம் பகுதியைத் தொடர்ந்து கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப்பணிகளில் முதுமயள் தாழி, எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் என தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்றைய அகழய்வுப்பணியில் குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூட்டை தொல்லியல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தக்குழந்தையின் எலும்புக்கூட்டை எந்தவித சேதாரம் இல்லாமல் கீழடி தொல்லியல் பொறுப்பாளர் சிவானந்தம் தலைமையிலான தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு மொத்த நீளம் 95 செமீ எனக்கூறப்படுகிறது. எலும்புக்கூட்டின் தலை மட்டும் 20 செமீ எனவும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் கொந்தகை அகழாய்வில் தலை இல்லாமல் முதலில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிறகு தலை கண்டெடுக்கப்பட்டது. தற்போது முழு அளவிலான குழந்தையின் எலும்புக்கூடு இரண்டாம் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடை விரைவில் மரபணு சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.