தமிழ்நாடு

”இதையெல்லாம் நிச்சயம் செய்யுங்கள்”.. ஆட்டோ தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் கோரிக்கைகள்!

”இதையெல்லாம் நிச்சயம் செய்யுங்கள்”.. ஆட்டோ தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் கோரிக்கைகள்!

PT

'ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்து கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டும். முன்பதிவு செய்யும் ஆப் கொண்டு வர தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு தலைவர்கள் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் பின்னர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டர் கட்டணம் மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 12 ம் தேதி போக்குவரத்து துறை கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில் குறைந்த கட்டணம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அடுத்த ஒவ்வொரு கி.மீ 25 ரூபாய் இருக்க வேண்டும் என நாங்கள் தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தனர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஆப் தமிழக அரசே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் தமிழக அரசு ஆட்டோ ஒட்டுனர் சங்கம்,நுகர்வோர் அமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய பிறகு இன்னும் தாமதம் செய்யாமல் அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதேபோல் ராபிடோ பைக் ஆப் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.