நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூர் மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறுதிபட தெரிவித்தனர். இதேபோன்று ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அண்ணா நகரிலுள்ள கந்தசாமி கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாணவர்கள் அனைவரும் பிராட்வே சிக்னல் பகுதியிலிருந்து பிராட்வே பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். அவர்களோடு போலீஸார் பேச்சு நடத்தினர். மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததோடு, ஜெயலலிதா நினைவிடம் அருகே தியானம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். போராட்டம் நடத்த போலீஸார் தொடர்ந்து அனுமதி மறுத்தனர். மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் அப்புறப்படுத்தினர். போராட்டம் நிறைவடைந்ததையொட்டி, ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேபோல, கிண்டி கத்திப்பாரா அருகேயும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்ததையொட்டி, போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையின் அணுகு சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.