தமிழ்நாடு

இ-பாஸ் ரத்து; அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் - இன்று முதல் அமல்

JustinDurai
கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த முறை, தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுவந்த சூழலில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு தற்போது ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை செயல்பட்டுவந்த கடைகள் அனைத்தும் இரவு 8 மணிவரை இயங்கலாம். 27 மாவட்டங்களில் மட்டும் இருந்து வந்த பேருந்து சேவை, கோவை, தஞ்சை உள்ளிட்ட மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் இடையேயும் இ-பதிவு மற்றும் இ-பாஸ் முறை ரத்தாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் இருந்துவந்த மத வழிபாட்டுத்தலங்களுக்கான அனுமதி, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரத்தில் தியேட்டர்கள், மதுபான கூடங்களை திறக்கவும் அரசியல் கூட்டங்களை நடத்தவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மாநிலங்கள் இடையே தனியார், அரசுப் போக்குவரத்து சேவைக்கும் அனுமதியில்லை.