தமிழ்நாடு

உதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை 

webteam

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர். 

நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர். 

முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இந்நிலையில் திருப்பதியில் உதித் சூர்யாவை பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரை சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் உதித் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர். 

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடமும் விசாரணை நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது