போச்சம்பள்ளி அடுத்த வேலாவள்ளி கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலின் பூசாரி கோட்டி பூஜை செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு கோயிலின் கதவு பகுதியை உடைத்துவிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கருவரையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன பட்டாளம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர்.
வழக்கம்போல் இன்று காலை பூசாரி கோட்டி கோவிலுக்கு வந்து பார்த்தபோது சட்டர் உடைப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மற்றும் சிலையின் கழுத்திலிருந்த ½ சவரன் தாலி உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கிராமத்தினர் மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோவிலில் இருந்த மற்றொரு சிலையிலிருந்த பண மாலை திருடப்படாத நிலையில் ஐம்பொன் சிலையை மட்டும் குறிவைத்து திருடியிருப்பது கிராம மக்களிடையை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக திருடப்பட்ட சிலையை மீட்டு தர அக்கிராம மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.