தமிழ்நாடு

``என்னை பாராட்டிய பிரதமருக்கு, என் நன்றி”- இளநீர் விற்கும் பெண்ணான தாயம்மாள் பேட்டி

நிவேதா ஜெகராஜா

உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில் அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடை அளித்த இளநீர் விற்கும் பெண்ணுக்கு பிரதமர் மோடி நேற்று புகழாரம் செய்திருந்தார். அதற்கு தாயம்மாள் தற்போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டியிலுள்ள திருப்பூர் சாலையில் இளநீர் கடை நடத்தி வருகின்றனர் ஆறுமுகம் - தாயம்மாள் தம்பதி. இவர்களில் தாயம்மாள், சில தினங்களுக்கு முன் தனது ஊரில் உள்ள அரசுப் பள்ளிக்கு ஏதேச்சையாக சென்றிருக்கிறார். அப்போது அங்கு கட்டிடபணி நடைபெற்று கொண்டிருந்ததையும் அதற்கு நிதி தேவைப்பட்டதையும் ஆசிரியர்கள் பேசிகொண்டிருந்ததை கேட்டிருந்திருக்கிறார்.

உடனடியாக, `நான் ஏதாவது தரலாமா’ என தலைமை ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார் அவர். அங்கே தலைமையாசிரியர், `உங்களால் முடிந்ததை தரலாம்’ என கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர், உடனடியாக வீட்டிற்கு சென்று தன் கணவரிடம் பேசி தங்கள் சேமிப்பிலிருந்து ரூபாய் ஒரு லட்சதிற்கான காசோலையை தயார் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த தலைமையாசிரியையிடம் தம்பதிகள் இருவரும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தாயம்மாள் அவர்களிடம் கேட்டபோது, “நம்மால் முடிந்ததை பள்ளிக்கு செய்யும் போது, பள்ளி வளர்ச்சி பெறும் என்பதால் என்னால் முடிந்ததை சிறு தொகையாய் தந்தேன். நான் கோயில்களுக்கு செய்வதைபோல் நினைத்துதான் பள்ளிகூட்டத்திற்கு செய்தேன். அதேநேரம், ஏதாவொரு தொகை என்றில்லாமல் ஒரு பெரிய தொகையாக தருவோமென நினைத்தேன். இந்தப் பள்ளியில்தான் எனது கணவர், எனது குழந்தைகள் எல்லோரும் படித்தனர். அவர்கள் படித்த இப்பள்ளி நல்ல முறையில் வளரவேண்டுமென நினைத்தேன். இதற்காக எனக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு என் நன்றி” என பெருந்தன்மையாக கூறினார்.

இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், இத்தம்பதிகளை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.