தமிழ்நாடு

முதல்வர் சொன்ன அந்த வார்த்தை. - ஆதரவற்றோருக்கு இருசக்கர வாகனம் மூலம் உணவு வழங்கும் தோழிகள்

முதல்வர் சொன்ன அந்த வார்த்தை. - ஆதரவற்றோருக்கு இருசக்கர வாகனம் மூலம் உணவு வழங்கும் தோழிகள்

webteam

மதுரையில் தோழிகள் சிலர் இருசக்கர வாகனம் மூலம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருவது பாராட்டைப் பெற்று வருகிறது.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலரான கவிதா மற்றும் அவரது தோழிகளான ராதிகா, சத்யா, மகேஸ்வரி ஆகியோர் வீட்டிலேயே உணவு தயார் செய்து, அதனை உணவு பொட்டலங்களாக மாற்றி, இருசக்கர வாகனங்கள் மூலம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

இது குறித்து தன்னார்வலர் கவிதா சொல்லும் போது, “ சுவடுகள் அறக்கட்டளை மூலமாக, வருஷத்துல 365  நாளும் நாங்க சாப்பாடு கொடுக்குறோம். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தெருவ பிரிச்சுக்குட்டு சாப்பாட கொண்டு போவோம். முதல்வருக்கு எங்க நன்றிய தெரிவிச்சுக்குறோம். “நோய்ப்பிணி போக்கும் பணியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பசிப்பிணி போக்கும் பணியை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்” அப்படினு அவர் சொல்லியிருந்தாரு. அவர் கட்சியினர சொன்னாலும் அந்த வார்த்த தன்னார்வலர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துருக்கு. காவல்துறையும் எங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க.” என்றார்.

இது குறித்து குழு உறுப்பினர்கள் சொல்லும் போது, “கொரோனா முதல் அலை வந்தப்ப மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆரம்பித்த அன்னவாசல் திட்டத்துல இணைஞ்சு ஆதரவற்றோருக்கு சாப்பாடு கொடுத்தோம். அதுக்கப்புறம் நாங்களே ஒன்னா சேர்ந்து  சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சோம். இதனால எங்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படுது.

மதுரையோட முக்கிய பகுதிகள் தொடங்கி பல இடங்களுக்கு எங்க உணவு போய் சேந்துருக்கு. இதுவரைக்கும் 350 பேருக்கும் மேல நாங்க சாப்பாடு கொடுத்துருக்கோம்.” என்றனர்.