தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம் PT
தமிழ்நாடு

”அரசியல் என்பது பரமபத விளையாட்டு.. இதில் ஏணிகளும் உண்டு.. பாம்புகளும் உண்டு” - தராசு ஷ்யாம்

Jayashree A

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனவும், ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக்கொண்டு முழுமையாக சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் பணியை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளார் விஜய்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களிடம் ”விஜய்காந்த் கட்சிக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு நடிகர் கட்சியை தொடங்கி இருக்கிறார். இது குறித்து உங்களின் பதில் என்ன?" என்ற நமது கேள்விக்கு

"அரசியல் ஒரு பரமபத விளையாட்டு, இதில் பாம்புகளும் உண்டு. ஏணிகளும் உண்டு. அதை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது. அந்த வரிசையில் விஜய் ஒரு முயற்சி எடுத்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை. அது வெற்றியை நோக்கி போகுமா அல்லது தோல்வியை நோக்கி போகுமா என்பது தெரியாது. இவர் எந்த மாதிரி அரசியல் சித்தாந்தங்களை உருவாக்குவார்? இதுதான் நம் முன் இருக்கும் கேள்விக்குறி.

விஜய்க்கு இப்பொழுது கையில் இருப்பது திரைப்படப் புகழ் மட்டுமே. இதைத் தாண்டி அரசியல் என்பது அவரிடம் இல்லை. எம்ஜிஆர் என்பவர் 20 வருட காலம் அரசியலில் இருந்து அதன் பிறகு கட்சி ஆரம்பித்தார்.இது போன்ற வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை.

அரசியல் இயக்கமாக விஜய் தனது ரசிகர் மன்றங்களை முதலிலிருந்து பழக்கப்படுத்தியிருக்க வேண்டும். விஜயகாந்த் இதை ஓரளவுக்கு செய்தார். விஜயைப்பொறுத்த வரையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மட்டுமே இவரது ரசிகர்களை பழக்கப்படுத்தியிருந்தார். நலத்திட்டம் வேறு அரசியல் வேறு” என்று கூறினார்.