செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி என்னும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ நாட்டின் சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி என்னும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர் நிலையை அடைந்தது.
இதைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு தீபமிட்டும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.