ஆதரவற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த முன்னாள் ஆட்சியர் pt desk
தமிழ்நாடு

தஞ்சை | ஆதரவற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த முன்னாள் ஆட்சியர் - நெகிழ்ச்சி நிகழ்வு

தாய் தந்தையை இழந்த பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் நின்று திருமணம் செய்து வைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராஜா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதியர். இவர்களது மூத்த மகள் பாண்டிமீனா நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து பாண்டிமீனா, அவரது தங்கையுடன் மோசமான நிலையில் இருக்கும் கூரை வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, பத்திரபதிவுத் துறை ஐ.ஜி.,யாக இருக்கும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை, நேரில் சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் போட்டோவுடன், தனது நிலையை எடுத்துக் கூறிய பாண்டிமீனா, அவரிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர், பாண்டி மீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாயையும், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாயும் பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி மூலம், வீடு ஒன்றை கட்டிக் கொடுத்தார்.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு, பாண்டி மீனாவின் வீட்டிற்குச் சென்ற, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டில் குத்துவிளக்கேற்றி, பாண்டி மீனாவிடம் வீட்டை ஒப்படைத்தார். அதன் பிறகு பாண்டிமீனா மற்றும் அவரது சகோதரி பாண்டீஸ்வரி இருவரையும், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது மகள்கள் போல, அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் பாண்டி மீனாவுக்கும், அபிமன்யு என்பவருக்கும் பேராவூரணியில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது செலவில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.. அப்போது 'எனது மகளை நன்றாக பார்த்துக்கொள்' என மணமகனிடம் கூறி, அனைவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் தான் காண்போரை நெகிழ வைத்துள்ளது.