தமிழ்நாடு

“சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்” - தமீமுன் அன்சாரி 

webteam

எல்லாவற்றையும் மறந்து ஓரணியில் நின்று சுர்ஜித்தை மீட்க நாம் வேண்டும் என தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறியுள்ளார். 
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பெரிய பள்ளி வாசலில் சுர்ஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என கூட்டுத் தொழுகை நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, உள்ளிட்ட பல இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடும் சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இந்த நாடே என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையும், கோயில் மற்றும் தேவாலயங்களிலும் பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறுவன் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று நாம் எல்லோரும் ஒரே குரலில் பிரார்த்தனை செய்து வருகிறோம். இதுபோன்ற இன்னல்கள் இனி நேராத வண்ணம் உரிய முறையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

விவசாய நாடான இந்தியாவில் ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுவதை தவிர்க்க முடியாது. இதுபோன்ற விபத்துகளில் சீனாவில் உள்ளதைபோன்ற தொழில்நுட்பம் நமக்கும் தேவைப்படுகிறது. அதை பரவலாக பயன்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.