10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சமூகநீதிக்கு எதிரானது என மக்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை பேசினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் ஏற்னெனவே உள்ளன. எதற்காக அவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு எனக் கேள்வி எழுப்பினார். அப்படியானால் இப்போது வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டின் பொருள், அத்தகைய திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதா? என்றும் வினவினார்.
மேலும் பேசிய அவர், அம்பேத்கர் நிறைய படித்தவர்தான். ஆனால் அவர் சாதிய அடிப்படையில்தான் ஒடுக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார். அதனால்தான் பொருளாதாரத்தை விட சாதியை சமூகநீதிக்கான அளவுகோலாகக் முன்னோர்கள் கொண்டார்கள் என்றும் தம்பிதுரை தெரிவித்தார். தமிழ்நாட்டை பின்பற்றி நீங்கள் வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்துங்கள். நாங்கள் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார்.
சாதி என்று ஒன்று இருக்கிற வரை இடஒதுக்கீடு என்பது தொடரவே வேண்டும் எனத் தெரிவித்த தம்பிதுரை ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் வாக்குறுதியளித்தாரே, அதை நிறைவேற்றியிருந்தால் இத்தகைய பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு அவசியமே வந்திருக்காது எனத் தெரிவித்தார். இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் தம்பிதுரை கூறினார்.