செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக காவடியுடன் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து முருகனுக்கு மாலை அணிந்தும், காவடி எடுத்தும் வருகை புரிந்துள்ளனர். பழனியில் குவியும் பாதையாத்திரை பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பழனி நகராட்சி, பழனி கோயில் அறநிலையத்துறை செய்துள்ளது.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து முத்துக்குமார வேல், வள்ளி தெய்வானை ஆகியோர் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. பழனியில் குவியும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.