தமிழ்நாடு

தை அமாவாசை: தாமிரபரணி ஆற்றங்கரைகளில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

Veeramani

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றின் கரையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்து வருகின்றனர்

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்துக்கள் தங்கள் மூதாதையர்களை நினைவு கூர்ந்து புண்ணியத் தலங்களில் உள்ள நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். இதற்காக புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில், வேத மந்திரங்கள் உச்சரிக்க எள் தண்ணீர் வைத்து மலர்களால் பூஜித்து தர்ப்பணம் செய்து அந்த பொருட்களை தலையில் ஏந்தி சென்று புண்ணிய நதிகளில் விடுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று உயிரிழந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.கடந்த ஆண்டு ஆடி அமாவாசை அன்று கொரொனா தொற்று குறைந்ததால் காவல் துறையின் பாதுகாப்புடன் தர்ப்பணம் கொடுக்க ஆற்றங்கரைகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்த ஆண்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகரித்த தொற்று கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வருகிறது. அந்த அடிப்படையில் தை அமாவாசையான இன்று லட்சக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் தர்ப்பணம் கொடுப்பர். இதற்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.