தமிழ்நாடு

விழுப்புரம்: இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை; 50 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை; 50 பேர் மீது வழக்கு

JustinDurai

திருவெண்ணெய்நல்லுார் அருகே, கோவில் திருவிழா தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால், பதட்டம் நிலவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் பகுதியில் உள்ள கோவிலில், கடந்த 12ம் தேதி சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. அன்று இரவு கொரோனா ஊரடங்கை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் போலீசார், மைக் செட்டுகளை பறிமுதல் செய்தனர். புகார் வந்ததால், நடவடிக்கை எடுத்ததாக கூறி, மைக் செட்டை விழா குழுவினரிடம் மீண்டும் ஒப்படைத்தனர். இதையடுத்து, விழாக்குழுவை சேர்ந்த சிலர், விழா நடத்த ரூ. 2 லட்சம் செலவு செய்ததால், அதனை திரும்ப கேட்டு, ஒரு பிரிவினரிடம் தகராறு செய்தனர்.

அதனால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. நேற்று காலை, விழா குழுவினர் சிலர், மன்னிப்பு கேட்டனர். அதற்கு விழா குழுவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் இரு பிரிவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து இரு பிரிவினரும் திருவெண்ணெய்நல்லுார் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், மூவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். மூவரையும் விடுவிக்க கோரி, நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டதால் பதட்டம் நிலவியது. தகவலறிந்த கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி., சின்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதனை அறிந்து, தாலுகா அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததை ஏற்று, கலைந்து சென்றனர்.ஒரு பிரிவினர் கொடுத்த புகார்கள் மீது, 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர். பதட்டம் நீடிப்பதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்