தமிழ்நாடு

திம்பம்: கால்நடைகள் நலனுக்காக வனக்காவலர்களிடம் கெஞ்சிய விவசாயி

நிவேதா ஜெகராஜா

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை நேரம் அமலுக்கு வந்த நிலையில், கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் வனத் துறையினரின் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த அதிகாரி, `இனி இப்படி வராதீர்கள்’ எனக்கூறி சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார்.

திம்பம் பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வழியே கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை வனத்துறையினர் பண்ணாரி பகுதியில் தடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த லாரியில் இருந்த விவசாயி இரவு முழுவதும் லாரியை நிறுத்தினால் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்து பராமரிப்பது உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பது குறித்து வனத்துறையினரிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் அவர் வனத்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சினார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் தடை குறித்து சுட்டிக்காட்டி அறிவுறுத்திய வனத்துறையினர், கால்நடைகளின் நலன் கருதி அந்த லாரியை மட்டும் மலைப்பாதையில் அனுமதித்தார்.