செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் ஸ்கேன் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்கேன் மையத்தில் திப்பணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வக்சலா என்ற 80 வயது மூதாட்டி ஸ்கேன் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்கேன் எடுக்கும் அறையின் கதவு திடீரென லாக்காகியுள்ளது.
இதனால் வெளியே வர முடியாமல் மூதாட்டி வக்சலா மற்றும் அவருடன் இருந்த செவிலியர் ஆகிய இருவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தென்காசி தீயணைப்புத் துறையினர், அறையின் லாக்கை நவீன தொழில்நுட்ப உதவியுடன் உடைத்து அறையில் இருந்த மூதாட்டி மற்றும் செவிலியரை மீட்டனர்.
இருந்த போதும், திடீரென ஸ்கேன் அறையின் கதவு திறக்காததால் அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிறிது நேரம் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.