செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்த அருள் என்பவரது மகன், சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் - கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பது வழக்கம். அப்படி நேற்று இரவும் காவலில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதோடு பாதுகாப்பு பணிக்கு சில காவலர்களை நியமித்து சென்றுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் செல்போன் எண்களைக் கொண்டு தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.