செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிராஜா. இவர், பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பனவடலிசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருத்தானூர் பகுதியில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று போலீசார், ரோந்து சென்றனர்.
இதையடுத்து குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த லெனின் என்ற குமார் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில், லெனின் கத்தியால் காவலர் மாரிராஜாவை தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளார். இதையடுத்து லெனினை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக காயமடைந்த காவலர் மாரிராஜா, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட லெனின் (எ) குமார் மீது திருட்டு, கஞ்சா, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.