தென்காசி pt web
தமிழ்நாடு

தென்காசி | குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.. துண்டிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.. மக்கள் அவதி

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

PT WEB

தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம், கடனாநிதி நீர்த்தேக்கம், ராமாநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமாநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1550 கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சன்னதி தெரு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. அங்குள்ள தெருக்களில் இடுப்பளவு நீர் செல்கிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகப்படியாக கனமழை பெய்ததால் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தலையணை பகுதி முழுவதும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் மின்சார வயர்கள் குறுக்கே கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பைத் துண்டித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பங்களை சீரமைக்கும் முயற்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர் .

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ள நதியின் பாலம் வேலை நடைபெற்று வருவதால் அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. கனமழை காரணமாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தற்காலிக பாலம் மூழ்கியது. இதன் காரணமாக கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் 20 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

செங்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாத நிலையில் மக்கள் தவித்து வந்தனர். பசியோடு தவித்து வந்த 65 பேருக்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் உணவு வழங்கி உதவி செய்தார். வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருந்த திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.