செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் ஐயா என்பவரது மகன் சிவகுமார். இவர், அதே பகுதியில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நலையில், இவர், இன்று காலை மர்மமான முறையில் வீட்டின் அருகே சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சிவகுமாரின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் சிறு சிறு காயங்கள் இருப்பதால் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த சிவகுமாரின் அருகில் மது பாட்டில்கள் இருந்ததாகவும் அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலும் விசாரணை முடிவில் தான் அடுத்தடுத்த தகவல்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.