காப்பகத்தில் உணவருந்திய 3 பேர் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

தென்காசி | காப்பகத்தில் உணவருந்திய 3 பேர் உயிரிழப்பு - 8 பேருக்கு தீவிர சிகிச்சை

தென்காசி அருகே காப்பகத்தில் உணவருந்திய 3 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ள நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் உணவருந்திய சில நபர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து 11 பேரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Death

இந்த நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 நபர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (48) முருகம்மாள் (45), சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகிய மூன்று பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்துமற்ற 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தென்காசி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காப்பகத்தில் உணவு சாப்பிட்ட நபர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.