தமிழ்நாடு

மதுரையில் பறக்கும் பாலத்துக்கு டெண்டர் அறிவிப்பு! எத்தனை கோடி ரூபாய்க்கு தெரியுமா?

webteam

மதுரை கோரிப்பாளையத்தில் பறக்கும் பாலம் அமைக்க 175 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பாலப்பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தகவல் தெவித்துள்ளனர்.

மதுரையில் முக்கிய சந்திப்பான கோரிப்பாளையம் சந்திப்பில் 210 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான நில ஆர்ஜித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இச்சந்திப்பில் அழகர்கோவில், பனகல், செல்லுார் பாலம் ஸ்டேஷன், ஏ.வி.பாலம், ஆழ்வார்புரம் ரோடுகள் சந்திக்கின்றன.

இச்சந்திப்பை சுற்றி முக்கிய வர்த்தக நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, கல்லுாரி, பள்ளிவாசல் உள்ளிட்டவை உள்ளன. தினமும் சராசரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சந்திப்பை கடந்து செல்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். அதன் காரணமாக அழகர்கோவில், மாட்டுத்தாவணி உள்ளிட்ட நகரின் வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இச்சந்திப்பை எளிதில் கடந்து நெல்பேட்டைக்கு செல்ல வசதியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் நெரிசலை தவிர்க்க காளவாசல், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி அழகர்கோவில் சாலையில் இருந்து துவங்கும் அந்த புதிய பாலம், தேவர் சிலைக்கு முன் இரண்டாக பிரிந்து அதன் ஒரு பகுதி ஏ.வி.பாலத்தையும், மற்றொரு பகுதி செல்லுார் செல்லும் அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி ரோட்டை இணைப்பதாக அமைய உள்ளது.

மொத்தம் 3.2 கி.மீ. நீளம், 12 மீ. நீளத்தில் ரூ.175.80 கோடியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 20 தேதி வரை விண்ணப்பக்க கடைசி நாள் என்றும் அதன் பின் டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 3 மாதங்களில் பணி துவங்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

டெண்டருக்கான விண்ணப்பங்களை tn.tender.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் பெற்றபின்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.