தமிழ்நாடு

ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தற்கொலை : கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

EllusamyKarthik

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தையிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சென்னை ஐஐடி வளாகத்தின் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நேற்று எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் பணிகளை செய்து கொடுக்க கடந்த ஏப்ரல் மாதம் அவர் தற்காலிக ஊழியராக சேர்ந்தவர். ஐஐடிக்கு வெளியே அறை எடுத்து அவர் தங்கியிருந்த நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்ட போது தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். 11 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து மிகுந்த தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், ஐஐடி மாணவர்களை போல தன்னால் இருக்க முடியுமா என தெரியவில்லை என்றும் ஆங்கித்தில் எழுதி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சென்னை வந்த உன்னிகிருஷ்ணனின் தந்தை ரகுவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.