தமிழ்நாடு

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 வங்கிக் கிளைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

webteam

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 வங்கிக் கிளைகளை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை  பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் 3,550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர், குன்னம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து கூலித்தொழிலாளர்கள் பலர் வந்துள்ளனர். முதற்கட்டமாக நடைபெற்ற பரிசோதனையில் அவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இன்னும் நூற்றுக்கணக்கானோரின் முடிவுகள் வரவுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்பூர் குன்னம் பகுதிகளில் உள்ள வங்கிக்கிளைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அகரம் சீகூர்,வயலப்பாடி,வேப்பூர்,துங்கபுரம்,குன்னம்,பரவாய், மேலமாத்தூர்,கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ், கனரா உள்ளிட்ட வங்கிகளின் 10 கிளைகளை இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை மூடமாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்ககையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.